தொலைந்து போய் அழும்பிள்ளையின் துயரும்
தொலைத்துவிட்டுக் கதறும் தாயின் வலியும்
ஒன்றாகத் தந்தாய்.
பாதி உயிரை இழந்த உடலின் கதறலும்
உடல் நீங்கிய உயிரின் தவிப்பும்
ஒன்றாகத் தந்தாய்.
பார்வையற்ற கண்களின் இருமையும்
வாயில்லா இதயத்தின் வெறுமையும்
ஒன்றாகத் தந்தாய்.
இனிமைகொள்ள ஒரு நினைவும்
தனிமைகொல்ல ஒரு நினைவும்
ஒன்றாகத் தந்தாய்.
எடுத்துப்போன இதயத்தை மட்டும் ஏன்
இரண்டாகத் தந்தாய்?
கடலினும் ஆழமானக் காதலுடன்
கடற்கரையில் காத்திருக்கத் துவங்குகிறாள் காதலியொருத்தி.
அவள் பார்த்தால் நெருங்குவதும் முறைத்தால் விலகுவதுமாய்
அலைந்து கொண்டிருந்தது கடல்.
நிலையாக நின்ற பாதத்தை நிலம் முத்தமிடத் துவங்கவும்
அங்குமிங்கும் நடக்கத் துவங்குகிறாள்.
நடக்கும் பாதம் உண்டாக்கிய காதல் ஓவியங்களை
கடலுக்குக் கடத்துறது அவளுக்குத் தெரியாமல் வந்த அலை.
காற்றுக்கும் யாரோ தூதனுப்ப தென்றல் உடையில் அதுவும் வந்து விட
தேவதையின் சிறகென தென்றலில் பறக்கும் துப்பட்டாவை அவள் இழுத்து நிறுத்தும் வேளையில்
தேவதைகள் ஏமாந்து போகின்றன.
ஒளிர்வதற்கு போட்டிவந்ததும் சூரியன் ஒளிந்துகொள்ள
உலகத்தின் ஒளிக்கு நிலவை அழைப்பதா இவளே போதுமா என்று குழம்புகிறது வானம்.
இவையெதனையும் கண்டுகொள்ளாமல்
எந்த கணத்திலும் பதுங்குதல் பாய்தல் என இரண்டுக்கும் தயாரான பார்வையை
கண்களில் ஒளித்துக்கொண்டு காதலனை மட்டுமே தேடுகின்றன அவள் கண்கள்.
தொலைவில் வரும் காதலன் கண்களைக் கண்டதும்
கண்களால் வல்லின சண்டையொன்று முடித்தவள்,
நெருங்கியதும் காற்றுக்கும் வலிக்காமல்
மெல்லின மொழியொன்றில் சொற்களை உச்சரிக்கத் துவங்குகிறாள்.
இப்பொழுது
எழுதுவதையும் வாசிப்பதையும் நிறுத்தி,
இமைகளை மூடிக்கொண்டால்…
காதலி தெரிகிறாள்!
பதிவுகளை செய்தியோடை மூலம் வாசிப்பதற்கு நன்றி நண்பரே! அழியாத அன்புடன், அருட்பெருங்கோ.
-----------------------------------------------------------
அண்மைக்காலமாக
எனக்குள்ளும் புதிய மாற்றங்கள்
தென்படத் துவங்கியிருக்கின்றன.
என்னைச் சுற்றி ஒளிவட்டம் தோன்றுவது எனக்கேத் தெரிகிறது.
இராத்திரியின் நீளம் விளங்குகிறது.
நானும் கவுஜை ஜொள்ளுகிறேன்.
என் பிம்பம் விழுந்தே கண்ணாடிகள் உடைகின்றன.
கண்களிரண்டும் ஒளிகொள்வதாக நண்பன் சொல்கிறான்.
தலையணை நனைக்கிறேன்.
மூன்று முறை பல்துலக்குகிறேன்.
காத்திருக்கும்போது நிமிடங்கள் வருடங்களாகின்றன.
வந்துவிட்டால் வருடங்கள் நிமிடங்களாகின்றன.
வயிற்றுக்கும் தொண்டைக்கும்
தொண்டைக்கும் தலைக்கும்
உருவமில்லா உருண்டையொன்று உருளுகிறது.
உண்மையாகவே இருதயம் அடிக்கடி இடம்மாறித் துடிக்கிறது.
நிசப்த அலைவரிசைகளில்
எனது குரல் மட்டும் ஒலிபரப்பாகிறது மிக மிக சத்தமாக.
எனது நரம்பே நாணேற்றி எனக்குள் அம்புவிடுகிறது.
புதிய ஹார்மோன்கள் நைல்நதியாய்ப் பெருக்கெடுக்கின்றன.
எனினும் உதடுகள் மட்டும் சகாராவாகிறது.
வாழ்ந்துகொண்டே சாகவும் முடிகிறது.
செத்துக்கொண்டே வாழவும் முடிகிறது.
ஆம். நானும் காதலிக்கத் துவங்கியிருக்கிறேன்,
கண்ணாடிக் கோப்பையில் நிறைந்து கொண்டிருக்கும் இந்த மதுவை.
சியர்ஸ் :)

