தமிழனுக்கு சொரணை இருக்கா? ‍ தாமரை

வன்னி களமுனை ‍ 13 நவம்பர்

தமிழக மீனவர்களின் மீதான தாக்குதல்:புதுடில்லி இ

தமிழர் விவகாரத்தில் எடுத்ததற்கெல்லாம் பலாத்காரத்தையும் அடக்குமுறையையும் பிரயோகித்து, துப்பாக்கி முனையில் பதில் கூறிப் பழகிக் கொண்டுவிட்ட இலங்கைப் படைகளுக்கு அந்தப் போக்கை மாற்றிக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் தமிழக மீனவர்களைக் கையாளும் விடயத்திலும் அதே திமிர்த்தனம் தொடர்கின்றது.

இதை சகிக்கமுடியாமல் இப்போதாவது சற்று சீறிப் பாயும் கட்டத்துக்குத் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி வந்திருக்கின்றமை உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு கடலில் இறங்கும் தமிழக மீனவர்களுக்கு சற்று ஆறுதல் தரும் விடயம்தான்.

"சார்க்' மாநாட்டுக்காகக் கொழும்புக்கு வந்திருந்த இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், இலங்கைக் கடற்படையின் கைகளில் தமிழக மீனவர்கள் படும் அவலங்கள் குறித்து அவர்களுக்கு நேரும் விபரீதங்கள் பற்றி இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நேரடியாக எடுத்துரைத்துத் தமது அரசின் காட்டமான கண்டனத்தையும் குறிப்பிட்டிருந்தார்.

அதற்குப் பதிலளித்த இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இனி எதிர்காலத்தில் எல்லை மீறும் இந்திய மீனவர்கள் விடயத்தில் இலங்கைக் கடற்படை பலாத்கார வழியை நாடித் தாக்குதலிலோ, துப்பாக்கிச் சூடுகளிலோ ஈடுபடாது என்று இந்தியப் பிரதமரிடம் உறுதியளித்தார் எனக் கூறப்படுகின்றது.
அப்படி இலங்கை ஜனாதிபதி உறுதியளித்தாரோ என்னவோ தெரியவில்லை. ஆனால் அப்படி உறுதிமொழி கொழும்பினால் வழங்கப்பட்டிருக்கின்றது என்ற தகவல் தமிழகத்திலும் புதுடில்லியிலும் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப்பட்டது.

ஆனால் அந்த உறுதிமொழி கொடுத்து ஒரு மாதத்துக்குள் மீண்டும் தமிழக மீனவர்கள் சுடப்பட்டிருக்கின்றார்கள். இதுவே தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியை இப்போது சீற்றத்துக்குள் ஆழ்த்தியிருக்கின்றது.

இலங்கையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசு 2005 கடைசியில் பதவியேற்றதற்குப் பின்பாக 2006 ஜனவரி தொடக்கம் இப்போது வரை தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் 27 தடவைகள் துப்பாக்கிப் பிரயோகத் தாக்குதல்களை நடத்தியிருக்கின்றார்கள். எட்டுப்பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். 24 பேர் காயமடைந்திருக்கின்றனர். 240 பேர் வரை கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்ற புள்ளி விவரங்களையும் தமிழக முதல்வர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

தமிழக முதல்வர் குறிப்பிடுகின்ற இன்னொரு விடயமும் இங்கு கவனிக்கத்தக்கதாக அமைகின்றது.
சர்வதேச கடல் எல்லையைக் கடந்து, இந்தியக் கடற் பிரதேசத்துக்குள் அத்துமீறி நுழைகின்ற இலங்கை மீனவர்கள் விடயத்தில் இந்தியா காட்டும் நல்லெண்ணத்தை தாராளத்தை தமிழக மீனவர் விடயத்தில் இலங்கை காட்டத் தவறுவது விசனத்துக்குரியது என்று தமிழக முதல்வர் சுட்டிக்காட்டுவதில் அர்த்தங்கள் பொதிந்திருக்கின்றன.

இலங்கை விவகாரத்தில், இந்தப் பிராந்தியத்தின் வல்லாதிக்க சக்தியான இந்தியாவின் இராஜதந்திரம் பல்வேறு விடயங்களில் தொடர் தோல்விகளைச் சந்தித்து வருகின்றது. தனது இயலாமை அப்பட்டமாக வெளிப்படுத்தப்படுவதைக் கண்டு வெட்கித் தலைகுனியும் நிலைக்குப் புதுடில்லி போய்விட்டது என்பதை ஈழத் தமிழர்கள் தரப்பே பலமுறை சுட்டிக்காட்டி வந்திருக்கின்றது.

அந்த வரிசையில் இந்திய இராஜதந்திரத்தின் செயற்றிறனின்மைக்கு கையாலாகாத்தனத்துக்கு நல்ல உதாரணமாகக் காட்டக்கூடிய மற்றொரு வெளிப்படையான விடயமாகத் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையின் கொடூரப் பிடியிலிருந்து காப்பாற்ற வக்கில்லாத புதுடில்லியின் போக்கைக் கருதலாம்.
இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்துக்கு ஒருபுறம் வாக்குறுதிகளை வழங்கிக்கொண்டு மறுபுறம் அந்த வாக்குறுதிகளுக்கு முரணான வகையில் தமிழர்களை அடக்கி, ஒடுக்கி, அடிமைப்படுத்தும் பேரினவாதப் போக்கைத் தமிழர்கள் மீது திணித்துக் கொடூரம் புரிகின்றமை போலவே

தமிழக மீனவர்கள் விடயத்திலும் தான் கொடுக்கும் வாக்குறுதிகளை வழமைபோல காற்றில் பறக்கவிட்டுவிட்டுத் தனது வழமையான அடக்குமுறை தாக்குதல்பாணி கைங்கரியத்தைத் தொடர்ந்து கட்டவிழ்த்து விடுகிறது இலங்கைத் தரப்பு.

நாட்டின் தலைவர்கள் மட்டத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை மீறும் வகையில், தமிழக மீனவர்கள் மீது இலங்கைத் தரப்பு கடலில் தாக்குதல்களை கண்மூடித்தனமாகத் தொடர்வது இதனையே நிரூபிக்கின்றது.
இத்தகைய தாக்குதல்களுக்கும் தனக்கும் எந்தத் தொடர்புமே இல்லை என்று கொழும்பு கைவிரித்து, சமாளிக்கும் நாடகமும் தொடர, அதைப் பார்த்து பாரதம் கைகட்டி மலைத்திருக்க வேண்டியதுதான்.

கொழும்பின் தந்திரோபாயங்களை குள்ள நரித்தனங்களை பட்டறிவு மூலம் கூட உணர்ந்து, அறிந்து, அவற்றை முறியடிக்கும் வகையில் தன்னை வலுப்படுத்திக் கொள்வதற்கு இந்திய வல்லாதிக்கம் தவறுமானால், கொழும்பின் ஏமாற்றுதல்களும் வெற்றிகரமாகவே தொடரும்.
சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு இது சமர்ப்பணம்.